இந்தோனேசியாவில் உள்ள ஒரு தீவுதான் பாலி (BALI). இத்தீவில் 93 சதவீத மக்கள் இந்துக்கள்.அதாவது 42 இலட்சம் இந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது.ஒரு காலத்தில் இந்து இராச்சியமாக இருந்த இந்தோனேசியாவில் முஸ்லிம் இராச்சிய படையெடுப்பிற்கு பிறகு அந்நாடு பெரும்பான்மை முஸ்லிம் நாடாக மாறியது. மஜாபஹிட் (Majapahit ) என்ற கடைசி இந்து மன்னர் வீழ்த்தப்பட்ட பிறகு, இந்து மதத்தை விட்டு மாறாமல் இருந்த மக்கள் பாலிக்கு குடிபெயர்ந்தனர்.

இங்கே ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் ஒரு நாள் மௌன விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. Nyepi day என்று இதனைச் சொல்கிறார்கள். மார்ச் 12ம் திகதி இந்த மௌன தினம் வருகிறது. இந்துக்களின் பண்டிகை போன்ற அந்த நாளில் இந்தோனேசியா முழுவதும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எந்த போக்குவரத்தும் இருக்காது. பன்னாட்டு விமான நிலையமான Denpasar (bali) விமான நிலையம் கூட மூடப்பட்டு இருக்கும். யாரும் பேசிக் கொள்ள மாட்டார்கள். வீட்டில் இருந்தபடியே தியானம் செய்வார்கள்.

பாலியில் உள்ள இந்து கலாசாரம் இந்திய ரிஷிகளிடமிருந்து வந்ததுதான். பாலி பாடசாலைகளில் இன்றும் கூட ரிஷிகளைப் பற்றிய பாடங்கள் இருக்கின்றன. புராணங்களில் வரும் மார்கண்டேய, அகஸ்திய, பரத்வாஜ ரிஷிகளை பற்றி பாலி குழந்தைகள் கூட தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.

பாலியில் ஆணுக்கும், பெண்ணுக்கும் தேசிய உடை வேட்டி. எந்த ஒரு பாலி கோயிலுக்கும் வேட்டி அணியாமல் ஆணோ, பெண்ணோ உள்ளே செல்ல முடியாது.

அனைத்து பாலி பாடசாலைகளிலும் கட்டயாமாக மூன்று வேளை சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள். அதே போல மூன்று வேளையும் காயத்ரி மந்திரத்தை அவர்கள் பாடசாலையில் சொல்லவேண்டும். பொதுவாக பாலி வானொலியில் மூன்று வேலை சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டிய நேரத்தில் அதை ஒலிபரப்புவார்கள்.

பாலி கோவில் அர்ச்சகர்களின் சம்பளத்தை இந்தோனேசியா அரசாங்கமே வழங்குகிறது. இந்தோனேசிய நாட்டின் மூதாதையர்கள் அனைவரும் இந்துக்களே, அதனால் அவர்களின் பண்பாடுகளில் இந்திய கலாசாரமே அதிகம் கலந்துள்ளது.

உலகில் அரிசி விளைவிக்கும் நாடுகளில் இந்தோனேசியா முக்கிய இடம் வகிக்கிறது, பாலி தீவு முழுவதும் அரிசி வயல்கள் இருக்கின்றன. பாலி மக்கள் விளைந்த அரிசியை முதலில் ஸ்ரீ தேவி, பூதேவி ஆகிய தெய்வங்களுக்கு படைக்கிறார்கள். அனைத்து வயல்களிலும் இந்த இரண்டு தெய்வங்களும் கோவில் இருக்கும், விவசாயிகள் இந்த இரு தெய்வங்களை வணங்கிய பிறகுதான் விவசாயத் தொழிலுக்குச் செல்வார்கள். 9ஆவது நூற்றாண்டிலேயே விவசாய மற்றும் நீர்பாசன விதிமுறைகளை இந்து பெரியோர்கள் கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள்.

பாலி இந்துக்கள் பூசை செய்யும் பொழுது அச்சுப் பதிப்பு செய்யப்பட்ட புத்தகங்களை வாசிப்பது இல்லை. இன்றும் கூட அவர்கள் கையால் எழுதப்பட்ட ஓலைச் சுவடியையே பயன்படுத்துகிறார்கள். இராமாணயம் அனைவருக்கும் தெரிந்து இருக்கும்.இராமாயண ஓலைச்சுவடியை நல்ல நாட்களில் எடுத்து வருவதற்கான திருவிழா நடைபெறும். அனைத்து திருவிழாக்களிலும் பாலி நடனம் ஆடுவார்கள், அதில் பெரும்பாலும் இராமாயண இதிகாசங்களை கதைகளாக சொல்வார்கள்.

இந்துக்களின் சொர்க்க பூமி பாலி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உலகின் அழகிய தீவுகளில் பாலி முக்கிய இடம் வகிக்கிறது. அழகிய இடங்கள், அமைதியான வாழ்க்கை முறை, பாரம்பரியமிக்க இந்து கலாசாரம், நடனம், இசை என்று இந்தத் தீவு உலக சுற்றுலா பயணிகளை அதிகம் கவருகிறது.