வங்கக்கடலில் புயல் அபாயம் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

வங்கக்கடலில் புயல் அபாயம் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
நேற்று அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி உள்ளது. அந்த புயலுக்கு ‘லூபன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல், அடுத்த 24 மணிநேரத்தில் தீவிர புயலாக மாறி ஓமன் நாட்டை அடைகிறது. இதுதவிர தென் கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளது. அது 2 நாட்களில் வலுப்பெற்று புயலாக மாறி ஆந்திரா வழியாக ஒடிசா செல்கிறது
புயல் மற்றும் தாழ்வு மண்டலம் ஆகியவற்றின் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நாளை (அதாவது இன்று) மழை பெய்யும். வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.
வட கிழக்கு பருவமழை தொடங்குவதாக இருந்தது. ஆனால் தொடங்கும் நிலை சாதகமாக இல்லை. எனவே வடகிழக்கு பருவமழை தள்ளிப்போகிறது. ஈரப்பத காற்று மாறுதல் காரணமாக வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கு உள்ள சூழ்நிலை தள்ளிப்போகிறது. அரபிக்கடலில் உருவாகி உள்ள லூபன் புயலும், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலமும் மறைந்தபிறகு தான் வடகிழக்கு பருவமழை உருவாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
திருப்புவனம் 15 செ.மீ., மானாமதுரை 13 செ.மீ., சித்தம்பட்டி 12 செ.மீ., ராமேசுவரம் 9 செ.மீ., பரமக்குடி 8 செ.மீ., வத்திராயிருப்பு, திருப்பூர் தலா 7 செ.மீ., மேட்டுப்பட்டி, பெரியகுளம் தலா 6 செ.மீ., வாடிபட்டி, இளையான்குடி, ஆர்.எஸ்.மங்கலம் தலா 5 செ.மீ., ராமநாதபுரம், மதுரை தெற்கு, கோவிலங்குளம், நன்னிலம், பெரியகுளம் தலா 4 செ.மீ., வால்பாறை, ராஜபாளையம், மைலாடி, பவானி, சாத்தனூர், சோழவந்தான், மணமேல்குடி, ஆயிக்குடி, கோபிசெட்டிப்பாளையம், உசிலம்பட்டி, நாகப்பட்டினம் தலா 3 செ.மீ.மழை பெய்துள்ளது. மேலும் 50 இடங்களில் மழை பதிவாகி உள்ளது.
வங்கக்கடல் பகுதியில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுபள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 1-ம் நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.