முதல்-அமைச்சர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யவேண்டும் மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யவேண்டும் மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்கிக்கொண்டு துணை வேந்தர்கள் நியமிக்கப்படுகிறார்கள்’ என்று அ.தி.மு.க. ஆட்சியில் துணை வேந்தர்கள் நியமனத்தில் நடைபெறும் ஊழலை தமிழக கவர்னர் ‘உயர் கல்வி கருத்தரங்கம்’ ஒன்றில் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

அதிலும் குறிப்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கவர்னரை சந்தித்து விட்டுத் திரும்பிய மறுதினமே இப்படியொரு ஊழல் புகாரை மாநிலத்தின் கவர்னரே சுமத்தியிருக்கிறார் என்றால் முதல்-அமைச்சரிடமே இந்த ஊழல் பற்றி நேருக்கு நேர் சுட்டிக்காட்டினாரா? என்ற கேள்வியும் எழுகிறது. அதேநேரத்தில் துணைவேந்தர் நியமனம், டெண்டர் ஊழல் உள்ளிட்ட அ.தி.மு.க. அரசின் மீது தி.மு.க. சுமத்தி வரும் ஊழல்கள் அனைத்தும் உண்மை என்பது இப்போது அரசியல் சட்ட பதவி வகிக்கும் கவர்னரின் குற்றச்சாட்டிலிருந்து நிரூபணமாகியிருக்கிறது.

ஆனால் ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய சகல அதிகாரங்களையும் அல்லது ஊழல்கள் குறித்து உரிய ‘மாதாந்திர அறிக்கை’ அனுப்பவேண்டிய அதிகாரத்தையும் பெற்றிருக்கும் கவர்னர் இப்படி பொதுமேடைகளில் பேசுவதற்குப் பதில், கடந்த ஒரு வருட காலத்தில் ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நேரம் இந்த ஊழல் அ.தி.மு.க. அரசு வீட்டுக்குப் போயிருக்கும் தமிழக மக்களுக்கும் நிம்மதி கிடைத்திருக்கும்.

அ.தி.மு.க. அரசு ஊழலின் மொத்த உருவமாக இருக்கிறது. ஆட்சியில் நடைபெறும் அனைத்து அப்பாயின்மென்டுகளிலும் (பணி நியமனத்திலும்) ஊழல் தலைவிரித்தாடுகிறது. துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் தொடர்பாகவும் கூட தி.மு.க.வே மனு அளித்திருக்கிறது.

இவை ஒருபுறமிருக்க, குட்கா ஊழல் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர், தமிழக டி.ஜி.பி. உள்ளிட்டோரின் வீடுகளில் சி.பி.ஐ. சோதனையே நடந்து விட்டது. அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி ஆகியோர் மீதும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறையில் தி.மு.க.வின் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. துணை முதல்-அமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் மீது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கை லஞ்ச ஊழல் தடுப்புத் துறை விசாரித்து வருகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக முதல்-அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி மீது ரூ.3,120 கோடி நெடுஞ்சாலைத்துறை ஊழல் தொடர்பாக கவர்னரிடம் நானே சென்று நேரடியாக மனு அளித்துள்ளேன். ஆனால் அ.தி.மு.க அரசின் மீதான இந்த ஊழல் புகார்கள் மீது கவர்னர் இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன? ஊழலின் சாக்கடையில் இந்த அரசு நீந்தட்டும் என்று அனுமதித்து விட்டு அமைதி காப்பது ஏன்? அரசியல் சட்டத்திற்கு விரோதமாக அ.தி.மு.க. ஆட்சி பதவியில் தொடருவதற்கும் அனுமதித்து இப்போது பொதுமேடைகளில் ஊழல் பற்றி பேசுவது ஏன்?

சி.பி.ஐ. சோதனைகளும், வருமான வரித்துறை சோதனைகளும் நடைபெற்றது அனைத்து பத்திரிகைகளிலும் தலைப்புச் செய்தியாக வந்தும், பிரதான எதிர்கட்சியின் சார்பில் கவர்னருக்கே புகார் அளித்தும் அ.தி.மு.க. அரசின் ஊழலை தடுக்க கவர்னரால் இதுவரை முடியாமல் போனது ஏன்? அ.தி.மு.க. என்ற ஊழல் அரசின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு கவர்னருக்கு தடை போடும் சக்தி எது? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் அணி வகுத்து நிற்கின்றன.

அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் கவர்னர் இப்படி ஊழல் பற்றி வெளிமேடைகளில் பேசுவது தமிழக மக்களுக்கு எவ்வித பலனையும் கொடுக்காது. அதற்கு பதிலாக, ஊழல் அ.தி.மு.க. அரசின் மீதும், முதல்-அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களின் ஊழல் மீதும் நடவடிக்கை எடுப்பது மட்டுமே இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கமுடியும்.

ஆனால் தமிழக கவர்னர் பதவியில் ஒருவருடத்தை பூர்த்தி செய்துள்ள கவர்னர், ஊழல் புகார்களின் மீது நடவடிக்கையும் எடுக்கத் தவறி அ.தி.மு.க அரசின் ஊழல்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் கவர்னர் ‘துணை வேந்தர்கள் நியமன ஊழல்’ பற்றி மட்டும் குறிப்பாக தேர்ந்தெடுத்து பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது.

ஆகவே அ.தி.மு.க. அரசின் ஊழல்களை தடுக்கவேண்டும் என்பது கவர்னரின் உண்மையான அக்கறையாக இருக்குமென்றால், துணை வேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடக்கிறது என்று ஆதாரப்பூர்வமாக பேசியிருக்கும் நிலையில், அதற்கு காரணமான உயர் கல்வித்துறை அமைச்சர், முதல்-அமைச்சர் உள்ளிட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அது தவிர தி.மு.க.வின் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள ஊழல் புகார்கள் அனைத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து, அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ஆட்சி நடத்திக்கொண்டு ஊழலில் நீச்சல் அடித்துக்கொண்டிருக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் குறிப்பிட்ட ஊழல் புகார்களுக்கு உள்ளான அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டும் என்றும் கவர்னரை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SUBSCRIBE