அறிமுக டெஸ்டிலேயே குறைந்த வயதில் சதம் அடித்து பிரித்வி ஷா சாதனை

அறிமுக டெஸ்டிலேயே குறைந்த வயதில் சதம் அடித்து பிரித்வி ஷா சாதனை

ராஜ்கோட்டில் நேற்று தொடங்கிய வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அறிமுக வீரர் பிரித்வி ஷா சதம் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 134 ரன்கள் குவித்த நிலையில் அவர் கேட்ச் ஆனார். இந்த போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியுள்ள மும்பையைச் சேர்ந்த பிரித்வி ஷாவின் வயது 18 ஆண்டு, 329 நாட்கள். இதன் மூலம் அறிமுக டெஸ்டிலேயே குறைந்த வயதில் சதம் நொறுக்கிய இந்திய வீரர் என்ற மகத்தான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு இந்தியாவின் அப்பாஸ் அலி பெய்க் வயது 20 ஆண்டு 126 நாட்களில், இங்கிலாந்துக்கு எதிரான (1959-ம் ஆண்டு) அறிமுக போட்டியில் சதம் அடித்ததே இந்த வகையில் சாதனையாக நீடித்தது. அந்த 59 ஆண்டு கால சாதனையை பிரித்வி ஷா முறியடித்துள்ளார். மேலும் பல்வேறு சாதனைகளை தனது பெயரில் இணைத்துக் கொண்டார். அதன் விவரம் வருமாறு:-
* டெஸ்ட் அரங்கில் முதல் போட்டியிலேயே சதம் அடித்த இளம் இந்தியரான பிரித்வி ஷா ஒட்டுமொத்த அளவில் பார்த்தால் 4-வது இடத்தை பிடிக்கிறார். ஏற்கனவே வங்காளதேசத்தின் முகமது அஷ்ரபுல் 17 ஆண்டு 61 நாட்களிலும் (114 ரன், இலங்கைக்கு எதிராக, 2001-ம் ஆண்டு), ஜிம்பாப்வேயின் ஹாமில்டன் மசகட்சா 17 ஆண்டு 352 நாட்களிலும் (119 ரன், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2001-ம் ஆண்டு), பாகிஸ்தானின் சலீம் மாலிக் 18 ஆண்டு 323 நாட்களிலும் (100*ரன், இலங்கைக்கு எதிராக 1981-82-ம் ஆண்டு) தங்களது முதல் டெஸ்டில் செஞ்சுரி அடித்திருக்கிறார்கள்.
* அறிமுக டெஸ்டில் சதம் அடித்த இந்திய வீரர்களின் வரிசையில் 15-வது வீரராக பிரித்வி ஷா இணைந்தார். ஒட்டுமொத்த அளவில் முதல் டெஸ்டிலேயே ஒரு வீரர் சதம் காண்பது இது 106-வது நிகழ்வாகும்.
* பிரித்வி ஷா 99 பந்துகளில் சதத்தை ருசித்தார். அறிமுக டெஸ்டில் 100-க்கும் குறைவான பந்துகளில் சதம் எடுத்த 3-வது வீரராக அவர் திகழ்கிறார். இந்த வகையில் முதல் இரு இடங்களில் இந்தியாவின் ஷிகர் தவான் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 85 பந்துகளில்), வெஸ்ட் இண்டீசின் வெய்ன் சுமித் (தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 93 பந்துகளில்) ஆகியோர் உள்ளனர்.
* முதல்தர கிரிக்கெட்டான ரஞ்சி போட்டியில் முதல்முறையாக தமிழகத்துக்கு எதிரான அரைஇறுதியில் (2016-17-ம் ஆண்டு) இதே மைதானத்தில் (ராஜ்கோட்) களம் இறங்கினார். அந்த ஆட்டத்தில் பிரித்வி ஷா 120 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் முதல்தரம் மற்றும் டெஸ்ட் இரண்டிலும் முதல் போட்டியிலேயே சதம் அடித்த 3-வது வீரர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார். இந்தியாவின் குண்டப்பா விஸ்வநாத், ஆஸ்திரேலியாவின் திர்க் வெல்ஹாம் முந்தைய சாதனையாளர்கள் ஆவர்.
* இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் 1990-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டரில் நடந்த டெஸ்டில் தனது ‘கன்னி’ சதத்தை எட்டிய போது அவரது வயது 17 ஆண்டு, 107 நாட்கள். அவருக்கு பிறகு ‘டீன்ஏஜ்’ வயதில் சதம் அடித்த இந்தியர் பிரித்வி ஷா தான்.
* ஒரு டெஸ்டின் முதல் பந்தை குறைந்த வயதில் சந்தித்தவர்களின் பட்டியலில் பிரித்வி ஷா 4-வது இடத்தை பெற்றுள்ளார். மசகட்சா (ஜிம்பாப்வே), தமிம் இக்பால் (வங்காளதேசம்), இம்ரான் பர்ஹட் (பாகிஸ்தான்) ஆகியோர் குறைந்த வயதில் முதல் பந்தை எதிர்கொண்ட முந்தைய வீரர்கள் ஆவர்.